fbpx
GeneralREவிவசாயம்

நாட்டுக்கோழி வளர்க்க ஆசை படுபவரா நீங்கள்? நஷ்டத்தைத் தவிர்க்க சில நல்ல யோசனைகள்!

நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பலர் நல்ல லாபத்தை பார்த்து வந்தாலும்,

ஒரு சிலர் பண்ணை ஆரம்பித்து சில மாதங்களிலேயே நஷ்டம் ஏற்பட்டு கோழி வளர்ப்பைக் கைவிட்டு விடுகிறார்கள்.

இதைத் தவிர்த்து, லாபகரமாக நாட்டுக்கோழிகளை வளர்க்கும் முறை குறித்து சில முக்கியமான தகவல்களை இங்கு காண்போம்;

“நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால்  அதை நாம் முறையாக செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

கோழி வளர்க்கறது என்ன பெரிய கம்ப சூத்திரமா? கிராமத்துல தானா அலையுற நாட்டுக்கோழிங்கள நாங்க சின்ன வயசுலயே பார்த்திருக்கோம்’னு நினைச்சுகிட்டு இதுல இறங்கக்கூடாது.

முறையாக  பயிற்சி எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில்  இதற்க்கான பயிற்சி இலவசமாவே கொடுக்கப்படுகிறது.

நாட்டுக்கோழிகளைக் கூண்டுல அடைச்சு வெச்சு வளர்த்தா பெருசா லாபம் கிடைக்காது. அதுகளை மேய்ச்சல் முறையில வளர்க்கும் போதுதான், நாட்டுக்கோழிக்கான இயற்க்கை  குணங்களோட கோழிகள் இருக்கும்.

இயற்கை முறையில் செலவுகளைக் குறைச்சு லாபத்தை அதிகரிக்க முடியும்.

நாட்டுக்கோழிகளை வாங்கும்போது, தரமான தூய ரக நாட்டுக்கோழிகளா பார்த்து வாங்க வேண்டியது மிகவும் முக்கியம். அதிகமான நஷ்டம் வருவது இந்த இடத்தில் தான்.

முதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்ற மாதிரி, இதுல தப்பு நடந்தா, தொடர்ந்து எல்லாமே தவறாகிடும். அதுனால தரம், ரகம் பார்த்து வாங்குறதுல மிகவும் கவனமா இருக்கணும்.

எப்பவுமே ‘வருமுன் காப்போம்’தான் சிறந்த வழி. அதனால, நோய் வருதோ இல்லையோ அந்தந்த சீசன்ல தடுப்பூசிகளைப் போட வேண்டியது அவசியம்.

நாட்டுக்கோழிகளுக்குப் பெருசா நோய்கள் தாக்காதுன்னாலும், தடுப்பு மருந்துகளைத் தவறாம கொடுக்கணும். அதை முறையா கடைப்பிடிச்சா, நோய்த் தாக்குதலிலிருந்து கோழிகளைக் காப்பாத்திடலாம். பெரும்பாலான பண்ணைகளில்  நோய்த்தடுப்பு முறைகளை சரிவர செய்யாமல் கோழிகள் இறப்பு அதிகமாகி நஷ்டம்  ஏற்படுகிறது.

அடுத்து தீவன மேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடிக்க வில்லை என்றாலும்  அதிக நஷ்டம் ஏற்ப்படும்.

நாட்டுக்கோழிகளைப் பிராய்லர் கோழி மாதிரி அடைச்சு வெச்சுத் தீவனம் போட்டு வளர்த்தா நஷ்டம்தான் வரும்.

நாட்டுக்கோழிளை  மேய்ச்சல் முறையில விட்டுட்டா, அதுங்களே தங்களுக்கான தீவனத்தைத் தேடி எடுத்துக்கும். குறைந்த அளவு  நாம கொடுத்தா போதுமானது.

அதுவும் மனிதர்களுக்குத்தேவையில்லாத கழிவுகளைத்தான் கோழிகளுக்குக் கொடுக்கணும்.

அழுகிய காய்கறிகள், முட்டைகோஸ், காலிஃபிளவர் கீரைகளில் கழிவுகள் மற்ற இலைகளும்  கொடுத்தாலே போதுமானது.

எவ்வளவு விலை அதிகமான, சத்தான கம்பெனி தீவனம் கொடுத்தாலும் 120 நாட்கள்ல நாட்டுக்கோழி ஒண்ணே கால் கிலோவுல இருந்து ஒன்றரை கிலோ எடைதான் வரும். இதுதான் நாட்டுக்கோழியோட இயல்பு.

அதனால, நாட்டுக்கோழிகளுக்கு விலை அதிகமான கம்பெனி தீவனம் தேவையே இல்லை. கடைகள்ல வாங்கினா ஒரு கிலோ தீவனம் 30 ரூபாய் வரை இருக்கும். அதனால, தீவனத்தைக் குறைவான செலவில் நாமளே தயாரித்து கொடுக்கலாம்.

மக்காச்சோளம் 50%, தவிடு 40%, பிண்ணாக்கு/ கருவாடு/ சோயா 8%, தாது உப்புக்கலவை 2%, உப்பு 1% இத எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு அரைத்தால் தீவனம் தயார். விலை மலிவான, தரம் குறைஞ்ச தானியங்களை அதாவது, உடைஞ்ச தானியங்களைக் குறைவான விலையில் வாங்கிப் பயன்படுத்தினாலே போதுமானது. நாம தயாரிக்கிற தீவனம் ஒரு கிலோ பத்து ரூபாயைத் தாண்டக்கூடாது. அப்பொழுதுதான் லாபகரமானதாயிருக்கும்.

கோழிகளைப் பொறுத்தவரைக்கும் தீவனம் வெச்சா, காலி பண்ணிக்கிட்டே இருக்கும். தட்டு காலியா இருக்கேன்னு நாமளும் கொட்டிக்கிட்டே இருக்கக்கூடாது.

ஒரு வார வயதுடைய ஒரு கோழிக்கு 10 கிராம் தீவனம் கொடுத்தால் போதும். இதை ஒவ்வொரு வாரமும் பத்துப்பத்து கிராமா அதிகரிச்சுட்டே போகணும்.

இந்தத் தீவனத்தையும், ஒரு நாளைக்கு மூணு வேளையா பிரிச்சுக் கொடுக்கணும்.

மீதித் தீவனத் தேவையை ‘மார்க்கெட் வேஸ்ட்’ கொடுக்குறது, மேய்ச்சலுக்கு விடுறது மூலமா சரிக்கட்டணும்.

அசோலாவையும் தீவனத்தோட கொடுக்கலாம். இந்த முறைகளைக் கடைப்பிடித்தால்  நாட்டுக்கோழி வளர்ப்பு கண்டிப்பா லாபகரமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close