கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் உடல் மாயம்… சவுதி அரசு அறிவிப்பு

ஒசாமா பின்லேடனை 4-க்கும் மேற்பட்ட முறை நேர்காணல் செய்திருந்த ஜமால் மாயமானது சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையார் ஜமால் திடீரென மாயமானார். இது குறித்த விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.

இவர் கடந்த 2-ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் சந்தேகமான முறையில் கொல்லப்பட்டார். இதில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறி வந்த சவுதி அரேபிய அரசு கஷோகி கொல்லப்பட்டதாக 2 நாட்களுக்கு முன் ஒப்புக்கொண்டது.

அவரது இறப்பைப் பற்றி பல முரண்பட்ட தகவல்களையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில் அரசு அதிகாரி ஒருவர், 15 பேர் கொண்ட குழு கஷோகியைக் கொல்லச் சென்றதாகவும் கொலை நடந்ததும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கஷோகியின் உடையணிந்து வெளியே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த கொலை குறித்து சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அதெல் அல் ஜுபைர் கூறுகையில், “இந்த கொலை உலக அளவில் எங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருக்கிறது.

மேலும், கொலை செய்யப்பட்ட ஜமாலின் உடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அவரை எப்படி கொலை செய்தார்கள் என்றும் தெரியவில்லை. அவரை கொன்றுவிட்டு எங்கே உடலை கொண்டு சென்றார்கள் என்று விசாரித்து வருகிறோம். சவுதிதான் இந்த கொலையை செய்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனையில் ஜமாலின் கொலை பற்றின உண்மைகள் வெளிப்படும் என்பதால் சவுதி அரசு உடலை காணவில்லை என்று பொய் சொல்வதாக கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர் ஜமால் கடும் சித்ரவதைக்கு பின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. அதனால்தான் சவுதி அரசு அவரது உடலை அளிக்க மறுக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close