4 லட்சம் இளைஞர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர்; இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அமோக வெற்றிபெற்று ஆந்திராவின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலின்போது தான் அளித்த வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறார்.

முதன்முறையாக முதலமைச்சர் அரியணை ஏறியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தன் மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து மக்களின் ஆதரவுகளைப் பெற்றுவருகிறார். ஜெகன்மோகன் ரெட்டி அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது விவசாயிகளுக்கு கடன் உதவி மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. அதன்படி, யாரும் எதிர்பாராத விதமாக 4.01 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளார்.

கிராமங்களில் வாழும் மக்களில் 4000 பேருக்கு ஒரு கிராம தலைமைச் செயலகம் என அமைக்கப்பட்டுள்ளது. அதில், 50 வீடுகளுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ளது. அவர், அந்த வீடுகளில் ரேஷன் கார்டு போன்ற நலத்திட்டத் தேவைகளை அந்தந்த துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதேபோன்று, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். கிராம தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர்களுக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதியாகவும், ரூ.5000 சம்பளமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள செயலகங்களில் பணி புரிபவர்களுக்கு, பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும் ரூ.15,000 சம்பளமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் சுமார் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு, அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி அன்று பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close