திமுக காங்கிரஸல்லாத கூட்டணி:தமிழிசை சௌந்தரராஜன்!

“திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகிற எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜனவரி 14) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், செண்டை மேளம் முழங்க பொங்கல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வாள் சண்டை, மான் கராத்தே செய்த தமிழிசை, மேளம் இசைத்து அருகிலிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவின் வெற்றிக்கான அச்சாரமாக அமையும். தேர்தலுக்கான தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மிகவும் திறமைசாலி, பல மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்து வெற்றியைத் தேடி தந்திருக்கிறார். அதனால் சவாலான இந்த மாநிலத்துக்கு அவரை பொறுப்பாளராக அமித் ஷா நியமித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

வெற்றிக்கான அச்சாரத்தில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையும் ஒன்று. தேமுதிக, தமாகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்ற கேள்விக்கு, “திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத நல்லாட்சியை விரும்புகிற, மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் இந்த நாட்டுக்கு வளர்ச்சித் திட்டம் தேவை என்று நம்பிக்கையுள்ள எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close