பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் :இயக்குனர்கள் 100 பேர் இணையத்தளம் தொடங்கி பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் 12 தினங்கள்  மட்டுமே உள்ள நிலையில் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், மலையாள இயக்குநர் ஆசிக் அபு, தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள், பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற கோரிக்கையின்  கீழ் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்த மக்களவைத் தேர்தலில் சிந்தித்து நாம் வாக்களிக்கவில்லை என்றால், பாசிசத்தின் அச்சுறுத்தலுக்கு நாம் மேலும் ஆளாக வேண்டியிருக்கும். நாட்டில் வகுப்புவாத சூழலை உருவாக்க கும்பல் தாக்குதல், பசு பாதுகாவலர்கள் போர்வையில் வன்முறையை பாஜகவினர் தூண்டி கொலை வெறித்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தேசிய உணர்ச்சி என்பது அவர்கள் கையில் இருக்கும் போலியான துருப்புச் சீட்டு. யாராது தனி நபரோ, அமைப்போ எந்தப் பிரச்னைக்காகவாவது குரல் கொடுத்துவிட்டால் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நம்மிடையையே இருந்த முக்கியமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களை நாம் இழந்திருக்கிறோம்.

நாட்டின் பாதுகாப்பு படைகளை அவர்களுடைய தந்திரங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தேவையற்ற போர் சூழலுக்குள் நம்மை தள்ளுகிறார்கள். நாட்டிலுள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியல் அமைப்புகள் மீது சகிப்புத்தன்மையற்ற தாக்குதல் நடத்தப்படுகிறது. தகுதி, அனுபவமற்றவர்கள் முக்கிய நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

விவசாயிகள் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டினை தொழிலதிபர்களின் சொத்தாக பாஜக மாற்றியுள்ளது. அவர்களது பொருளாதார நடவடிக்கைகள் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்ற, நம்முடைய அனைத்து வகையான சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அரசாங்கத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close