நிபா வைரஸ் பரவலை தடுக்க கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு வார்டு !

கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகம் வருபவர்கள் மூலம் நிபா வைரஸ் பரவலை தடுக்க வாளையாறு சோதனைச்சாவடியில் சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்காக 24 மணிநேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.

வௌவால் மற்றும் அணில் மூலமாக பரவும் நிபா வைரஸ் தொற்றினால் மூன்று நாட்களுக்கும் மேலாக தலைவலி, இருமல், மூளைக்காய்ச்சல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். விரைவாக இந்த நோய் பரவக்கூடும் என்பதால் அண்டை மாநில எல்லைகளில் சோதனை கூடங்கள் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன மாநில அரசுகள்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் நிபா வரைஸ் தாக்குதலில் 17 நபர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது எர்ணாகுளத்தில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தமிழக – கேரள எல்லையில் அமைந்திருக்கும் தேனி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், குறிப்பிட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்க தேவையான நடவடிக்கைகள் துரித கதியில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நமக்கு கிடைக்கும் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதாகவும், மருத்துவக்குழு போதுமான விழிப்புணர்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்றும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். நிபா தொற்று குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அறிக்கைகளை பெற்று வருவதாகவும் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close