நீட் தேர்வு தற்கொலை:-மாணவிகள் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் ரிதுஸ்ரீ மற்றும் வைஷியாவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2019- ஆம் ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவில் தகுதி நுழைவு தேர்வு (நீட்) மே 5-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜூன் 5-ல் வெளியாகின.

நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் நேற்று மதியம் 1.35 மணியளவில் வெளியாகின. நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9.01 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ, மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போன வருத்தத்தில் திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ (17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர், 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா (17) என்ற மாணவியும் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா ஆகியோரின் அதிர்ச்சியளிக்கும் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் என் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற மத்திய பா.ஜ.க. அரசு, இன்னமும் தமிழ்நாட்டில் நடக்கும் “நீட்” தற்கொலைகளை அமைதியாகவும், அராஜக மனப்பான்மையுடனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இந்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான மாணவ மாணவியரின் உயிருடன் விளையாடாமல், “நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்” என தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் அனுமதியை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு நீட் தேர்வின் போதும், தமிழக மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதை ஆகிவருவது நாட்டிற்கும் நல்லதல்ல, தமிழகத்திற்கும் நல்லதல்ல என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து திருத்திக் கொள்ளும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் “நீட் பிரச்சினையை” நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி, உரிய தீர்வு காண முயற்சிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close