“கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது” காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு…!

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் “காப்பான்” பட இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய வைரமுத்து, இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி “பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல, தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர்”. “சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறினார்.

பாடலாசிரியர் கபிலன் பேசுகையில், “கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியதை, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தால், அதை பிரதமர் மோடி கேட்டிருப்பார்” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், சில வருடங்களுக்கு முன்பு நானும் கே.வி. ஆனந்துடன் இணைந்து படம் செய்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பிறகு அது சரியாக அமையவில்லை.

தமிழாற்றுப்படை புத்தகத்தைப் படித்த பிறகு வைரமுத்து மீதான மதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளது.

கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும்.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வம் படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன்.

தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டிருக்கிறது.

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருவரின் கலவையாக உள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையில் வசீகரா பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

புதிய கல்விக்கொள்கை பற்றி ரஜினி பேசினால் மோடிக்குக் கேட்டிருக்கும் என்றார்கள். ஆனால் சூர்யா பேசியது மோடிக்குக் கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். சூர்யா மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். மாணவர்கள் படுகிற கஷ்டத்தை நேரில் பார்ப்பவர் அவர். புதிய கல்விக்கொள்கையைப் பற்றி சூர்யா பேசியபிறகு அவருடைய இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்..

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close