ரஜினியை விமர்சிக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை !

மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து அண்மையில் நடிகர் சூர்யா பேசினார். அப்போது அவர் பேசுகையில், பல்வேறு விதமான வாழ்வியல் முறைகளையும், வேறுபட்ட மொழி கலாச்சாரப் பின்புலங்களையும், பல்வேறு வகையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மாறுபட்ட நிலவியல் அமைப்புகளும் இருக்கிற இந்நாட்டில் ஒரே மாதிரியான தேர்வுமுறையினைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்லாது சமூக அநீதியும்கூட.

ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த முயலாத இந்நாடு ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடி. 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்தப் புதிய கல்விக் கொள்கை. இதனால், கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படப் போகின்றனர். நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் கண்கூட பார்த்து வருகிறோம். பள்ளிப் பருவம் முழுவதும் தேர்வுகள் எழுதி, பின்னர் அதற்கு எந்தப் பயனும் இல்லையென உயர்கல்விக்குத் தனியாக தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு எனக் கொண்டு வருவது சமமின்மையை அதிகரிக்கவே செய்யும்.

இதே அணுகுமுறை நீடித்தால் பயிற்சி மையங்கள் காளான்கள் போல மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுக்கும். கல்லூரிகளில் எண்ணிக்கையை ஒருபுறம் குறைத்துவிட்டு மறுபுறம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்போம் என்பது முரணாக உள்ளது. இதைப்பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எழுப்ப வேண்டும். மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது” என்றார். அவருக்கு கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், திருமாவளவன், சீமான் உள்பட பலர் ஆதரவளித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு நடந்த சூர்யா நடித்துள்ள `காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “புதிய கல்விக் கொள்கை குறித்து சமீபத்தில் சூர்யா பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினிகாந்த் இதே கருத்தைப் பேசியிருந்தல் மோடி கேட்டிருப்பார் என்று இங்கே பேசினவர்கள் கூறினார்கள். சூர்யா பேசினாலே மோடி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன்” என்றார்.

ரஜினியின் இந்தக் கருத்தை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை எதிர்த்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் ஆலயத்தில் நேற்றிரவு நடந்த விழாவில் பேசிய அவர், “புதிய கல்விக்கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று ரஜினி, சூர்யா, திருமாவளவன் ஆகியோர் கூறுகின்றனர்.

நான் சொல்கிறேன், இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் இருக்கிறது. உங்களுக்கு என்ன கருத்துகள் பதிய வைக்க வேண்டுமாே அதைப் பதிய வைக்கலாம். ஜனநாயக முறைப்படி அதற்கான அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இப்போது கொடுத்திருக்கிறது வரைவுதான்.

தமிழகத்தில் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்விதானே இப்போது இருக்கிறது. செல்வந்தர்கள் படிக்கிற பள்ளியே தமிழகத்தில் இல்லையா? ஏதோ இப்போது எல்லாம் சமமாக இருக்கிறது போலவும் புதிய கல்விக்கொள்கை வந்தால் ஏற்றத் தாழ்வு வந்துவிடும் என்றும் பேசுகிறார்கள். இப்போதுதான் சமமான நிலை இல்லை. புதிய கல்விக்கொள்கை வந்தால் எல்லாம் சமமான நிலைக்கு வரும்” என்றார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close