4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!

தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், கோவா மாநிலம், பனாஜி பேரவைத் தொகுதிக்கும், கர்நாடக மாநிலம், குந்துகோல் பேரவை தொகுதிக்கும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதியில் (ஏப்.18) சேர்த்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை என ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சூலூர் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கனகராஜ் திடீரென மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து, அந்த தொகுதியையும் சேர்த்து காலியான தொகுதிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இந்தச் சூழலில், 18 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தியது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close