தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மிக அதிதீவிர புயலான ஃபோனி புயல் தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் திசை மாறி, ஒடிசாவின் புரி அருகே கரையைக் கடந்தது. ஃபோனி புயல் காரணமாக தமிழகத்தில் இருந்து நிலக்காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகத்தில் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் கோடை வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 112 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பம் பதிவானது. திருத்தணி, சென்னை, மதுரை, திருச்சி, கடலூர், பாளையங்கோட்டை, கரூர், பரமத்தி, நாகை, காரைக்கால், பரங்கிபேட்டை, தஞ்சை, தருமபுரி, புதுச்சேரி, தூத்துக்குடி, சேலம், திருப்பத்தூர் நகரங்களிலும் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இயல்பைவிட அனல்காற்று வீசுவதால், அதனை சமாளிக்க முடியாமல், பல இடங்களில் மக்கள் தவித்து வருகின்றனர்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close