ஆசிரியர்களுக்கு கொடுத்த அவகாசம் முடிவுக்கு வந்தது!

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு கொடுத்திருந்த அவகாசம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், பணியில் சேர இன்று வருவோருக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தினால் அரசு பணிகள் மற்றும் கல்வி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்ததோடு மட்டுமன்றி, அவர்களை பணியிடை நீக்கம் செய்து, அப்பதவிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள், நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளி கல்வி துறை அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து 80 விழுக்காடு ஆசிரியர்கள் இரவு 7 மணிக்குள் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பணியில் சேராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இன்று பணியில் சேர வந்தால் பழைய பள்ளிக்கு பதிலாக வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close