சிறுநீரகக் கல் வந்துவிட்டால் எந்த உணவை சாப்பிடலாம் ? எதை சாப்பிடக்கூடாது ?

சிறுநீரகக் கல்:

 

நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் உள்ளன. உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சில நேரங்களில், இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும். இந்த உப்புக்கள் நாள்பட சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் படிகம்போல் படிந்து, கல் போலத் தோன்றும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது.

இந்த சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்கள் எந்த உணவை உட்கொள்ளலாம், எந்த உணவை சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்ப்போம் :

எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?

சிறுநீரகக் கல் வந்து விட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத் தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும்.

நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப் பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை சிறுநீரின் அமிலத் தன்மையை குறைத்துவிடும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும். அடுத்து கல் உருவாவதும் தடுக்கப்படும். கீரைகளில் முடக்கத்தான் கீரையில் மட்டுமே கால்சியம் இல்லை. இதை உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த உணவை சாப்பிட கூடாது?

காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது.

உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது.

உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவு களைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.

ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவைக் குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும். எனவேதான், இந்த எச்சரிக்கை!

வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும் போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Close
Close